Resources Resources on Novel Coronavirus Disease (COVID-19)
கொரோனா குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்
Gautam Menon
தற்போதைய உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து, நோய் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளின் விரைவான பெருக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்கள் இந்த வதந்திகள் பரவுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. இது குறித்து அசோகா பல்கலைகழகம் மற்றும் சென்னை கணிதவியல் கழகம் ஆகியவற்றில் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியாக பணியாற்றும் முனைவர் கவுதம் மேனன் அவர்களுடன் நேர்காணல்.
Translated into Tamil by Hema Prabha and TV Venkateshwaran
கொரோனா வைரஸ் (COVID-19) என்றால் என்ன, மக்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்?
இந்த நோயை COVID-19 (கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019) என்றும், அதை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ், நாவல் (புதிய ) கொரோனா வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கிரீடத்தை போல கூர்முனைகளின் தொகுப்பைக் கொண்டிருப்பதால் கொரோனா என்று பெயரிடப்பட்டது (“கொரோனா” என்பது லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள்படும்).
பல வைரஸ்கள் மனிதர்களில் நோய்களை ஏற்படுத்துகின்றன. போலியோ, தட்டம்மை, காய்ச்சல் (“காய்ச்சல்”) மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்கள் இதில் அடங்கும். இந்த நோய்களில் சிலவற்றுக்கு, தடுப்பூசிகள் உள்ளன. இந்த தடுப்பூசிகளில் சில , உங்கள் இளவயதில் எடுக்கும் தடுப்பூசி மருந்துகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். சில தடுப்பூசிகள் வளர்ந்த பின்னர், வருடம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். இந்த நோய்த்தடுப்பு மருந்துகள், உங்கள் நோயெதிர்ப்பு திறன் உங்கள் உடலில் நுழையும் வைரஸை அடையாளம் கண்டு போராட முடியும் என்பதை உறுதி செய்கின்றன.
நமது உடல் முன்பு பார்த்திராத ஒரு வைரஸை எதிர்கொள்ளும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. பொதுவாக விலங்குகள் அல்லது பறவைகளில் பரவும் வைரஸ்கள், எடுத்துக்காட்டாக, பன்றிகள், கோழிகள் மற்றும் வெளவால்களிடம் இருக்கும் வைரஸ் எப்போதாவது, மனிதர்களுக்குள் ஊடுருவுகின்றன. இதனால் புதிய நோய்கள் ஏற்படுகின்றன. COVID-19 அத்தகைய ஒரு நோய். அதற்குரிய வைரஸ் வெளவால்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
மக்கள் பல காரணங்களால் COVID-19 பற்றி கவலைப்படுகிறார்கள். முதலாவதாக, இது ஒரு சுவாசம் சம்பந்தபட்ட நோயாகும். இது நபருக்கு நபர் பரவுகிறது. இரண்டாவதாக, நோயால் பாதிக்கப்பட்ட சிறுபன்மையினர் நேரிடுகிறது.. மூன்றாவதாக, அதற்கு நமக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அதற்கு எதிராக தடுப்பூசிகள் எதுவும் இல்லை, மற்றும் அதற்காக நாம் எடுக்கக்கூடிய மருந்துகள் எதுவும் தற்போது இல்லை.
இந்த நோய் மக்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் தொற்று எவ்வாறு பரவுகிறது?
பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் உள்ளன. பெரும்பாலும், இவற்றில் அதிக காய்ச்சல், உலர்ந்த இருமல் மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். சில சந்தர்ப்பங்களில், உடல் வலி, மூச்சுத் திணறல், தசை மற்றும் மூட்டு வலி, தொண்டை வலி , தலைவலி, சளி மற்றும் அவ்வப்போது வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்கலாம். இந்த நோய் இளையவர்களை விட வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. 0 முதல் 9 வயதுக்குட்பட்டவர்கள் மிகவும் குறைவாக பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு, இதய நோய், நுரையீரல் நோய் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற சில வியாதிகள் ஏற்கனவே உடையவர்களை இந்த நோய் வலுவாக தாக்கக் கூடியது.நிமோனியாவை உள்ளடக்கிய இந்த நோயின் மிகவும் கடுமையான விளைவுகள் ஐந்தில் ஒரு நோயாளியிடம் காணப்படுகின்றது.
நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ அல்லது தும்மும்போதோ வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் இந்த நோய் பெரும்பாலும் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் சிந்திய பரப்பில் நீடிக்கும், பின்னர் நீங்கள் இந்த பரப்புகளைத் தொட்டபின்பு உங்கள் வாய் அல்லது முகத்தைத் தொடலாம். அப்போது உங்கள் உடலுக்குள் நுழைந்து, குறிப்பாக உங்கள் நுரையீரலை அடையும்.
நானும் மற்றவர்களும் அதைப் பெறுவதைத் தடுக்க நான் ஏதாவது செய்ய முடியுமா?
கண்டிப்பாக! நீங்கள் செய்யக்கூடிய விஷயம் நிறைய உள்ளது.
வைரஸ் சுவாச பாதை வழியாக பரவுகிறது, அதாவது யாரோ தும்மும்போது அல்லது இருமும்போது வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக. இந்த துளிகள் ஒருவரின் கை அல்லது கதவு போன்ற பரப்புகளில் பரவக்கூடும், அதாவது மக்கள் தொடும் எந்த இடத்திலும். அங்கிருந்து, வைரஸைச் சுமக்கும் சிறிய நீர்த்துளிகள் உங்கள் வாய் மற்றும் நுரையீரலுக்கு மாற்றப்படலாம். தீர்வு? வைரஸ் பரிமாற்றத்தைத் தடுக்க உங்கள் கைகளை கவனமாகக் கழுவுங்கள்; இதற்கு யூடியூப்பில் கிடைக்கும் சிறந்த வீடியோக்களைப் பின்பற்றுங்கள் (எ.கா.) மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைகளைக் கழுவ பயன்படுத்தும் நுட்பங்களை சொல்லும் காணொளிகள். உங்கள் கைகளை கழுவுவதற்கு முன்பு நீங்கள் சோப்பு மற்றும் தண்ணீருடன் குழாயின் பகுதியை கழுவுங்கள், பின்பு உங்கள் கைகளைக் கழுவுங்கள்.
உங்களிடம் தண்ணீர் மற்றும் சோப்பு இல்லையென்றால், ஆல்கஹால் சார்ந்த சானிடிசர் உபயோகியுங்கள். முடிந்தவரை முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
தவிர, பாதிக்கப்பட்டவர்களுடன் உடல் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டத்தைத் தவிர்க்கவும். மற்றவர்களிடமிருந்து இத்தகைய உடல் ரீதியான பிரிவைப் பராமரிப்பது ‘“ சமூக தொலைவு" என்று அழைக்கப்படுகிறது. மக்களிடமிருந்து ஒரு "பாதுகாப்பான" தூரம் பொதுவாக மூன்று முதல் ஆறு அடி வரை கருதப்படுகிறது. கைகுலுக்குவதைத் தவிர்க்கவும். உடல் தொடர்பைக் குறைக்க “வணக்கம்” அல்லது ஆதாப் என்று சொல்லும் தமிழ் முறைகளை பின்பற்றுங்கள்.
நான் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணிய வேண்டுமா?
முகமூடிகளை அணிவது மற்றவர்களிடம் உங்களைப் பாதுகாப்பதை விட, உங்களுக்கு நோய் இருந்தால் மற்றவர்களுக்கு அதைப் பரவாமல் தடுக்கிறது. அதற்கும் மேலாக, தனிநபர்களை விட அதிக தேவை, சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இருக்கிறது. எனவே, உங்களுக்கு சுவாச நோய் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், முகமூடியை அணியுங்கள். இல்லையென்றால் வேண்டாம்.
எனக்கு சளி / காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்னை சோதித்துப் பார்க்க வேண்டுமா மற்றும் / அல்லது சுய தனிமைப்படுத்த வேண்டுமா?
COVID-19 இன் அறிகுறிகள் பல பொதுவான நோய்களின் (காய்ச்சல், ஃப்ளு போன்றவை) அறிகுறிகளை ஒத்திருப்பதால், கொரோனாவிற்கு பதிலாக வேறு ஒரு நோய் உங்களை பாதித்திருக்கலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், செய்ய வேண்டிய முதல் விஷயம், 'சுய தனிமைப்படுத்தல்', அதாவது வெளியே செல்லாமல் வீட்டிலோ அல்லது ஒரு இடத்திலோ தங்கியிருப்பது. இதனால், பிறருக்கு இது பரவாது. இது மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று உங்களுக்கும், உங்கள் பராமரிப்பாளர்களுக்கும் இடையில் நேரடி அல்லது மறைமுக உடல் தொடர்பு இருக்கக்கூடாது.
சுவாச சுகாதாரத்தை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது, அதாவது உங்கள் முழங்கையில் அல்லது நீங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தக்கூடிய துணி/தாளில் இருமுவது. நீங்கள் அடிக்கடி கை கழுவுவதோடு மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் செய்யச் சொல்லுவது. மேலும், நன்றாக ஓய்வெடுங்கள், நிறைய திரவ ஆகாரங்களை உட்கொள்ளுங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்களை உண்ணுங்கள். உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆலோசனை தரக்கூடிய தொடர்பு எண்ணுக்கு அழைக்கவும். பொதுவாக சொல்ல வருவது, அறிவுறுத்தப்படாவிட்டால் நேரடியாக மருத்துவரை சந்திக்கச் செல்ல வேண்டாம். ஏனென்றால், நீங்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் பயணிக்கும் வழியில் இருக்கும் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவீர்கள்.
உங்களுக்கு இருமல் மற்றும் / அல்லது மூக்கு ஒழுகுதல் இருந்தால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில், முகக்கவசத்தால் எந்தப் பயனும் இல்லை.
நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் ‘தனிமைப்படுத்தப்படுவார்கள்’ என்று கேள்விப்பட்டேன். இதன் பொருள் என்ன, இது பயப்பட வேண்டிய ஒன்றுதானா?
இரண்டு வகையான ‘தனிமைப்படுத்தல்கள்’ உள்ளன.
ஒன்றில், நீங்கள் அரசாங்கம் ஏற்பாடு செய்த அறைகளில் தங்கவைக்கப்படுவீர்கள், இதனால் நோய்த்தொற்று இல்லாத மற்றவர்களுடனான உங்கள் தொடர்பு கடுமையாகக் குறைகிறது. நோய் அதிகம் பரவிய ஒரு நாட்டிலிருந்து நீங்கள் இந்தியா வந்திருந்தால், இந்த முறையில் நீங்கள் தனிமைபடுத்தப்படுவீர்கள்.
அடுத்ததில், நீங்கள் நோய்த் தோற்று உள்ள ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்பட்டால், ‘சுய தனிமைப்படுத்தலுக்கு’ உள்ளாக்கப்படுவீர்கள். இதன் பொருள் நீங்கள் வீட்டிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ தங்க வேண்டியிருக்கும். இங்கே தங்கினால், மற்றவர்களும் பரவாது என்று நீங்கள் நினைக்கும் இடத்தில் தங்கலாம்.
மற்றவர்களுடனான உங்கள் உடல் தொடர்பு குறைக்கப்படுவதை ‘தனிமைப்படுத்தல்’ உறுதி செய்கிறது. பொதுவாக ‘தனிமைப்படுத்தப்படுதல்’ காலமானது இரண்டு வாரங்கள் நீடிக்கும். இரண்டு வாரங்களின் முடிவில், உங்கள் உடல்நிலையைப் பரிசோதிக்கும் சுகாதார அதிகாரிகள்/மருத்துவர்கள் உங்களுக்கு நோய்த் தோற்று இல்லை என்பதை உறுதி செய்தால், பின்பு ‘தனிமைப்படுதல்’ அவசியமில்லை.
தனிமைப்படுத்தலுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சமாக, நமது தினசரி பழக்கங்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு ‘தனிமைப்படுத்தப்பட்டபடு’ இடம், நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பதையும், வெளி உலக நபர்களுடன் தொடர்பில் இருப்பதையும் உறுதி செய்யும். உங்களுக்கு சத்தான உணவு மற்றும் பிற வசதிகள் வழங்கப்படுவதை இது உறுதி செய்யும். இதனால் நீங்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகளில் எந்த பிரச்னையும் இருக்காது.
நோயின் தாக்கம் குறைகிறதா இல்லையா என்பதைப் பொருத்து, தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும். யார் தனிமைப்படுத்தப்பட வேண்டும், யார் தேவையில்லை என்பதை தீர்மானிப்பதற்கு அரசாங்கம் இன்னும் கடுமையான விதிகளை வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. இது கொரோனா பரவலைப் பொருத்தே இருக்கிறது.
இறைச்சி சாப்பிடுவது, அல்லது சீனாவிலிருந்து தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுநோயைப் பெற முடியுமா?
கண்டிப்பாக அதற்கு வாய்ப்பே இல்லை. முதலாவதாக, இது ஒரு வைரஸ் ஆகும், இது சுவாசப் பாதை வழியாக மனிதர்களிடையே பரவுகிறது; நீங்கள் சந்திக்கும் எல்லா மிருகத்திடமும் இது தொற்றிக்கொள்ளாது. எனவே இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், இது போன்ற வைரஸ்கள் பரப்பில் நீண்ட காலம் நீடிக்காது, அதிக வெப்பநிலையையும் பொறுத்துக்கொள்ளாது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு பொருள் வந்தடைய ஆகும் கால தாமதத்தில் எந்த வைரஸும் உயிரோடு தப்பிக்காது. இதனால் தொற்றுநோய்க்கு அஞ்சாமல் சீனா தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட வேண்டுமா?
தொற்றுநோயின் கட்டத்தைப் பொருத்தது. ஆரம்ப கட்டங்களிலும், உச்சத்தை அடைவதற்கு முன்பும், அதைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் போது, பள்ளிகளை மூடுவது ஒரு பயனுள்ள உத்தி. தொற்றுநோய் பரவலாகிவிட்டால், ஏற்படும் இடையூறுகளை விட இது போன்ற நடவடிக்கைகள் பரவாயில்லை. இப்போது பல இந்திய மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், கவலை எப்போதும் வயதானவர்களைப் பற்றியே உள்ளது. அதுவும் ஏற்கனவே பிற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கொரோனா தொற்றின் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களின் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு எதிராக தடுப்பூசி இருக்கிறதா, அல்லது எனக்கு தொற்று ஏற்பட்டால் அதைத் தடுக்க மருந்து இருக்கிறதா?
இதுவரை இல்லை. உலகின் பல ஆய்வகங்களில் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்ப்பு உள்ள சில தடுப்பு மருந்துகள் இனம் காணப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வேறு நோய்களுக்கு பயன்பட்டு வரும் மருந்துகளில் எவை இதற்கும் உதவக்கூடும் என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. COVID-19 நோயாளிகளிடம் செலுத்தி இந்த மருந்துகளின் வீரியம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பான தடுப்பூசி தயாரிக்க ஓரிரண்டு வருடங்கள் எடுக்கும்.
ஆயுர்வேத மூலிகைகள் ஹோமியோபதி போன்ற மருந்துகளை கொண்டு வைரஸ் தொற்று வராமல் தடுத்துக் கொள்ளலாம் என நான் கேள்விப்படுகிறேன். இவற்றை நான் நம்ப வேண்டுமா?
சிலர் அழுத்தமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் மரபு மருத்துவம் இந்த வைரஸ் தொற்றுக்கு எவ்வளவு உதவும் என்பது குறித்து போதுமான தடயங்கள் இல்லை. இதற்க்கு ஆதாரமாக சில துண்டுத் துணுக்கான சம்பவங்கள் முன்வைக்கப் படுகிறது. மனமும் மருந்தும் சேர்ந்தது தான் ஆரோக்கியம், எனவே சில சமயம் உள்ளபடியே மருந்துகளின் தாக்கத்தில் குணமடையாவிட்டலும் நம்பிக்கை தரும் மன அமைதி குணமாக உதவக்கூடும் இதைதான் பிளசிபோ ( ஆறுதல் மருந்து) விளைவு என்கிறோம்.
ஆயினும் சமூக தொலைவு நடவடிக்கைகள் (ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி தருதல் போன்றவை) சுவாச சுகாதாரம் (வாய் மூக்கை மூடிக்கொண்டு மட்டுமே இறுமுவது தும்முவது) மற்றும் கைகளை கழுவுதல் போன்றவை பெரும் பலம் தரும். கிருமி நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். மரபு மருந்தில் ஆபத்து வந்துவிடப் போவதில்லை. ஆனால் மரபு மருந்து கவசமாக இருந்துவிடும் என நம்பி மேற்கூறிய பாதுகாப்பு நடைமுறைகளை கைவிடாமல் இருக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை. அதே போல பழம், காய்கறிகள் முதலியவை நமது நோய் தடுப்பு திறனை அதிகரிக்கும். சத்தியமான சமயங்களில் சூரிய ஒளியை உடல் மீது படர செய்யுங்கள். தண்ணீர் நிறைய குடியுங்கள். பதட்டம் அடைய வேண்டாம். மன அழுத்தம் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இயல்பாக உங்கள் உடல் கிருமியை எதிர்கொள்ள முடியாது போகும்.
COVID-19 பரவாமல் தடுக்க அரசு என்ன செய்கிறது?
சர்வதேச சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுரையின் அடிப்படையில் இந்திய அரசு பொது சுகாதார கட்டமைப்பை இயக்குகிறது. பெருகிவரும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறித்து கவனமாக கவனித்து சுகாதார துறை அமைச்சகம் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தேவையான அறிவுரை வழங்குகிறது. நோயாளிகளை தனிமை படுத்துதல் மற்றும் சிகிச்சை குறித்த முறையான அறிவுரைகளை அளிக்கிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து யாரும் புதிதாக உள்ளே நுழைவதை தடை செய்துள்ளது. ஏற்கனவே வழங்கியுள்ள விசா அனைத்தையும் ரத்து செய்துவிட்டது. நோய் அல்லது கிருமி தொற்று இருக்கலாம் என கருதும் நபர்களை தனிமைப் படுத்தி மருத்துவ கண்காணிப்பு செய்யும் பல முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. ஆயினும் தமக்கு நோய் இருக்கும் என கவலை கொள்பவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து இனம் காணும் வசதி அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இன்னமும் இது நடைமுறையில் இல்லை.
அடுத்த சில நாட்களில் நிலைமை எப்படி போகிறது என்பதை பொருத்தே விளைவுகள் அமையும். சமூக பரவல் ஏற்பட்டுவிட்டால் அதிவிரைவில் நோய் பற்றும் நபர்கள் எண்ணிக்கை பெருமளவு கூடும். மருத்துவ துறை சமாளிக்க முடியாது போய்விடும். எனவே தான் சமூக விலக்கம் என்ற கருத்தை அரசு வலியுறுத்துகிறது. சமூக விலகல், நோய் கிருமி பரவ வாய்ப்பு உள்ளவர்களை தேடி இனம் காணுதல் மற்றும் தானே சுயமாக தனிமை படுத்தல் மேலும் நோய் அறிகுறி உள்ளவர்களை கண்காணித்தல் ஆகியவை இப்போது கைக்கொள்ளும் நடவடிக்கைகள்.
இந்த தொற்று போய்விடுமா நீடிக்குமா? வேனில் காலம் வந்தால் கிருமி பரவல் தடைபடுமா? மறுபடி அடுத்த குளிகாலத்தில் தலைதூக்குமா?
இதை முன் கணித்து கூறுவது மிகமிக கடினம். ஃப்ளு போன்ற சில வைரஸ் நோய்கள் பருவ காலங்களை ஒட்டி எழும் விழும். பொதுவே குளிர்காலத்தில் கூடி வெயில் காலத்தில் குறைந்து போகும். COVID-19 நோய் ஏற்படுத்தும் வைரசும் இதே தன்மை கொண்டதா என்பது புதிர். கோடை காலத்தில் தாக்கம் மங்கி போகலாம். அலல்து ஒருவேளை குளிர்காலத்தில் இரண்டாம் அலையாக தாக்கலாம். நமக்கு தெரியாது என்பதே உண்மை.
கரோனா வைரஸ் குறித்து நம்புதலுக்குரிய அறிவியல் பூர்வமான தகவல்களை எங்கு பெறலாம்?
சர்வதேச சுகாதார அமைப்பு (WHO), அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நிகழ மற்றும் நோய் பரவல் மற்றும் தடுப்பு அமைப்புகளின் (Centers for Disease Control and Prevention -CDC) இணையதளத்தை நாடலாம். முக்கிய செய்திதாள்களின் இணையதளங்களும் செய்திகளை தருகின்றன. WHO அல்லது சுகாதார அமைச்சகத்தின் இணையதளங்கள் மூலம் உடனடி நிலவரம் மற்றும் தற்போதைய அறிவுரைகள் குறித்த தகவல்களை பெறலாம்.
தனிநபர் எத்துனை அளவு அச்சம் கொள்ளவேண்டும்?
நீரிழிவு, இதய நோய், நுரையீரல் நோய், ரத்தக்கொதிப்பு போன்ற வேறு எந்த நோயும் இல்லை மேலும் உங்கள் வயது அறுபதுக்கும் குறைவு என்றால் பொதுவே இந்த கிருமி உங்களை தொற்றி மறையும்போது வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஆனால் அறுபது வயதுக்கு மேல், வேறு சில நோய்கள் கொண்டவர் என்றால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி சற்றே குறைவாக இருக்கும். அப்போது அடுத்தவர்களுடன் நெருங்கி அண்டுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்தும் தூரமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலத்தை கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.
எந்த வயதுக்காரர் என்றாலும் சமூக விலகல் அறிவுரையை கடை பிடியுங்கள். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுங்கள். நோய் கிருமி தாக்கம் இருக்கும் என சந்தேகம் உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள். உங்களுக்கு இந்த நோய் இருக்கும் என நீங்கள் சந்தேகம் கொண்டால் COVID-19 ஹாட் லைன் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வெல்கம் டிரஸ்ட் டிபிடி அலையன்ஸ் அமைப்பின் சி.இ.ஒ ஷாஹித் ஜமீல் மற்றும் THSTI ஆய்வு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ககன்தீப் காங் அவர்களுக்கு நன்றி
தமிழாக்கம்: இஸ்ரேலில் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர் இ.ஹேமபிரபா மற்றும் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் முதுநிலை விஞ்ஞானியாக இருக்கும் த வி வெங்கடேஸ்வரன்